தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை கண்காணிக்க துவங்கியிருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை இயக்குநர் பிரதாப் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் கூறுகையில், “ஒரு மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்தால் பணப்பட்டுவாடா நடப்பதை கட்டுப்படுத்த 6 மாதங்களுக்கு முன்பாகவே வருமான வரித்துறை கண்காணிப்பில் ஈடுபடத் தொடங்கும். அந்தவகையில் தமிழ்நாட்டில் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த கண்காணிப்பு பணியை வருமான வரித்துறை தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 30 வருமான வரித்துறை ஆய்வாளர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வருமான வரித்துறை கூடுதல் இயக்குநரின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகின்றனர். வாரந்தோறும் ஆய்வு குறித்த அறிக்கைகளை தயார் செய்து சமர்ப்பித்து வருகின்றனர். குறிப்பாக, பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகள் தமிழகத்தில் உள்ளே வருவதையும், வெளியே செல்வதையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மத்திய புலனாய்வு அமைப்புகளுடனும், தமிழக போலீசாருடனும் இணைந்து இந்த கண்காணிப்பு பணிகளை வருமான வரித்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை, அமலாக்கத் துறை, மத்திய உளவுத் துறை, ஜிஎஸ்டி உளவுத் துறை ஆகிய அமைப்புகளையும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்றார்.

Comments are closed.