திருச்சியில் பரபரப்பு: போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு…!
திண்டுக்கல், பெரிய கடை வீதி, பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (32). இவர் திண்டுக்கல், கோவை உட்பட பல மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டார். சரித்திர பதிவேடு ரவுடி பட்டியலிலும் உள்ளார். இவரை திண்டுக்கல் மற்றும் கோவை போலீசார் தேடி வந்த நிலையில் இவர் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோவை மாநகர போலீஸ் தனிப்படை உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் 4 போலீசார் இன்று ( டிச.12) திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீனிவாச நகரில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த ராஜசேகரை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் அவர் தப்பி ஓடினார். தனிப்படை போலீசார் அவரை பிடிக்க முயன்ற போது உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் முதல் நிலை காவலர் கண்ணன் ஆகியோரை கத்தியால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி பக்கத்து தெருவில் ஓடிய போது உதவி ஆய்வாளர் கண்ணன் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். துப்பாக்கியால் சுடப்பட்டதில் ராஜசேகருக்கு இடது விலாவிலும், இடது தொடையிலும் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது. அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.வெட்டுக்காயம்பட்ட உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் முதல் நிலை காவலர் கண்ணன் ஆகியோரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையனை, தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.