திருச்சி மாவட்டம், குண்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவர் இரண்டு பேருக்கு ஓட்டுநர், பழகுநர் (எல்.எல்.ஆர்.) உரிமம் பெறுவதற்காக திருச்சி, பிராட்டியூரில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றார். அங்கு மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி என்பவரிடம் ஓட்டுனர் பழகுநர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை அளித்துள்ளார். அப்போது மணிபாரதி, எல்.எல்.ஆர். வழங்க ரூ.1000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனியப்பன் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் , லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் ஆலோசனையின் பேரில், மணிபாரதியிடம் பழனியப்பன் லஞ்சப் பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று அவரை கையும், களவுமாக பிடித்தனர். மேலும், மணிபாரதியின் உதவியாளர் திலீப்குமார் என்பவரிடமிருந்து 13,000 பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.