திருச்சி, தென்னூரில் உள்ள அம்மா உணவகத்தை அகற்றவோ, சிறிதாக்கவோ கூடாது: மாநகராட்சி ஆணையரிடம், மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மனு…!
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர், மாநகராட்சி ஆணையர் மதுபாலனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னூர் அண்ணாநகர் சிவப்பிரகாசம் சாலை, உழவர்சந்தை மைதானம் அருகில் அ.தி.மு.க.ஆட்சியில் கடந்த 2013-ம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்ட அம்மா உணவகம் இன்று வரை ஏழை, எளிய மக்களின் பசியினை போக்கி வருகிறது. ஆனால், திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அந்த அம்மா உணவகத்தை அகற்றி சிறியதாக்கி அதற்கு பின்புறம் புதிதாக அமையவுள்ள மனமகிழ் மன்றத்திற்காக பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அறிகிறோம். ஆகவே, அம்மா உணவகத்தை அகற்றவோ, சிறிதாக்கவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்று கொண்ட ஆணையர், அம்மா உணவகம் பின்புறம் வர இருக்கும் மனமகிழ் மன்றத்திற்கு பாதை அமைப்பதற்காக அம்மா உணவகத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, மீண்டும் மறுபக்கம் அம்மா உணவகத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் அதே அளவு மீண்டும் கட்டிக் கொடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Comments are closed.