வருகிற சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களம் காண்கிறது. இதற்காக 2 மாநாடுகளை வெற்றிகரமாக முடித்துள்ள விஜய், ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்தார். கரூர் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு ஒரு மாதத்திற்கு மேலாக அமைதி காத்தார். அதிலிருந்து மெல்ல, மெல்ல மீண்டு வந்து பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார். பின்னர் காஞ்சிபுரத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்ற கூட்டத்தை நடத்தினார். அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து ஈரோட்டில் த.வெ.க. சார்பில் விஜய் பிரசார கூட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெற இருந்தது. இந்தநிலையில் பிரசார கூட்டம் 18-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 19 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தவெக தலைவர் விஜய் வருகிற 18-ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருகிறார். ஈரோட்டில் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை என்ற இடத்தில் விஜய் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் பிரசாரம் நடைபெறும். ஏற்பாடுகளை நாங்கள் தீவிரமாக செய்து வருகிறோம். கூட்டம் நடத்த எந்தத் தடையும் இல்லை. நான் விருப்பப்பட்டு இந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கிறேன். கடுமையாக உழைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். தவெக தலைவர் விஜய்யை முதல் அமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம். யாரை கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விஜய் முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.