Rock Fort Times
Online News

புதுச்சேரியில் த.வெ.க. தொண்டர்களை திறம்பட கையாண்ட பெண் போலீஸ் அதிகாரிக்கு அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டு…! 

புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் உயரதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். டி.ஜி.பி. ஷாலினிசிங், ஐ.ஜி.அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுக்கள், எஸ்.பி.க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விஜய் பொதுக்கூட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கிய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங் உட்பட பல்வேறு வகையிலும் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளை அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரி மாநில காவல்துறை 2 நிலைகளில் முதலிடம் பெற்றுள்ளது. மத்திய அரசு புதிதாக 3 சட்டங்களை உருவாக்கி கடைபிடிக்க வழிமுறைகள் வகுத்தது. புதுச்சேரி மாநிலம் 90 நாட்களுக்குள் 80 சதவீத குற்றபத்திரிகையை தாக்கல் செய்து இந்தியாவில் முதலிடத்தை பெற்றுள்ளது. 60 நாட்களில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யும் பிரிவில் கேரளா, புதுச்சேரி முதலிடத்தை பெற்றுள்ளது. இதற்காக மத்திய உள்துறை  அமைச்சர் புதுச்சேரி அரசை பாராட்டியுள்ளார். அகில இந்திய அளவில் பாகூர் போலீஸ் நிலையம் 8-ம் இடம் பிடித்து மிகப்பெரும் சாதனை செய்துள்ளது.  சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த டி.ஜி.பி., ஐ.ஜி. மாநாட்டில் புதுச்சேரியில் நடைபெறும் மக்கள் மன்றத்தை சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் இதை நடத்த அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டிய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங், த.வெ.க. கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் போது த.வெ.க. நிர்வாகிகளிடம் எனது வேலையை ஒழுங்காக செய்ய விடுங்கள் என்று ஆவேசமாக பேசி  கூட்டத்தை திறம்பட கையாண்டவர் ஆவார். இவரது இந்த ஆவேசமான பேச்சு சமூக வலைதளங்களில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்