Rock Fort Times
Online News

புதுச்சேரியில் நாளை(டிச.9) தவெக பொதுக்கூட்டம்: தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்காக விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். அதேபோல புதுச்சேரியிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக நாளை (டிச.9) விஜய் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி அளிக்கக்கோரி, அக்கட்சியினர் மனு அளித்தனர். ஆனால், ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி மறுத்த போலீசார், பொதுக்கூட்டம் மட்டும் நடத்திக் கொள்ள அனுமதித்து உள்ளனர். அதற்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மாநாட்டில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இதுதொடர்பாக தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கியூஆர் கோடு உடன் கூடிய அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த அட்டை இல்லாதவர்கள் மாநாட்டுக்கு வர வேண்டாம். மாநாட்டில் பங்கேற்க குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை. தவெக மாநாட்டில் பங்கேற்பதற்கு புதுச்சேரியில் வசிப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. புதுச்சேரியில் பாண்டி மெரினா பார்க்கிங், மைதான பின்புறம் மற்றும் பழைய துறைமுக பகுதி ஆகியவற்றில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சாலையோரங்கள் அல்லது பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் உள்ளே வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்