விஜய்யை, பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது – சொல்கிறார் செல்வப் பெருந்தகை…!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருப்பதால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தமிழ் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி தலைவர்கள் இப்போதே பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் கூட்டணி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி நேற்று( டிச.5) சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்துள்ளது. விஜய்யை சந்தித்து பேசியுள்ள பிரவீன் சக்கரவர்த்தி, ராகுல்காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். ராகுல்காந்திக்கு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். எனவே அவர் விஜய்யை சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.
இந்தநிலையில் சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் விஜய் – பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், த.வெ.க. தலைவர் விஜய்யை, பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது. திமுகவோடு காங்கிரஸ் ஐவர் குழு பேச்சு நடத்துவதுதான் எங்களுக்கு தெரியும். விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை. பேசவும் சொல்லவில்லை. இந்தியா கூட்டணியை சிதைக்க முடியாது, கூட்டணி வலுவாக உள்ளது. விஜய் – பிரவீன் சசக்கரவத்தி சந்திப்பு குறித்து மேலிடத்திடம் பேச உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.