ராமநாதபுரம் அருகே நின்று கொண்டிருந்த கார் மீது திமுக பிரமுகரின் கார் மோதல்: ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு…!
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் ராமேஸ்வரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் இன்று (டிச.6) அதிகாலை ஓய்வு எடுப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கடற்கரை சாலை கும்பிடுமதுரை அருகே சாலையோரம் காரை நிறுத்தியிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கீழக்கரை திமுக நகர் மன்ற தலைவரின் கார் சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரில் 3 பேர் மற்றும் திமுக நகர் மன்ற தலைவரின் கார் ஓட்டுநர் என 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழக்கரை போலீசார், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ஆந்திர மாநில ஐயப்ப பக்தர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமச்சந்திர ராவ், அப்பாரோ நாயுடு, பண்டார சந்திரராவ், ராமர் மற்றும் கீழக்கரை திமுக நகர் மன்ற தலைவரின் கார் ஓட்டுநர் முஸ்தாக் அகமது ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.