பீகாரை போல தமிழகத்திலும் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு… 16-ம் தேதி முழு பட்டியல் வெளியீடு!
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பீகார் மாநிலத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்மூலம், பீகாரில் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக புகார்கள் எழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, கடந்த மாதம் 4-ந் தேதி முதல் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் இன்றுடன்(டிச.4) முடிவடைய இருந்த நிலையில், மழை உள்ளிட்ட காரணத்தால் இம்மாதம் 11-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 11-ந் தேதி இந்தப் பணிகள் முடிவடையும் நிலையில் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. கடந்த 1-ந் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 5 கோடியே 16 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். தற்போது நடத்தப்பட்ட சிறப்பு திருத்த பணிகள் மூலம் 77 லட்சத்து 52 ஆயிரத்து 529 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும், என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இறந்தவர்கள் என்ற முறையில் 25 லட்சத்து 72 ஆயிரத்து 871 பெயர்களும், இடம் பெயர்ந்தவர்களாக 39 லட்சத்து 27 ஆயிரத்து 973 பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இரட்டைப் பதிவுகளும் நீக்கப்பட உள்ளன. மொத்தத்தில், தமிழகத்தில் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர் என்ற விவரம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் நாளான இம்மாதம் 16-ந் தேதி தெரிந்துவிடும்.

Comments are closed.