Rock Fort Times
Online News

திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி…!

திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஏ.வி.எம். நிறுவனத்தின் இயக்குநர் ஏ.வி.எம்.சரவணன் (86) வயதுமூப்பு காரணமாக இன்று (டிச.04) காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களை ஏ.வி.எம்.நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.வி.எம்.சரவணன் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர் ஏவிஎம் ஸ்டுடியோ மூன்றாவது தளத்தில் அவர்களுக்கு இன்று மாலை 3.30 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலம் மாலை 4 மணியளவில் புறப்பட்டு ஏ. வி.எம்.ஸ்டுடியோ பின்புறம் உள்ள மயானத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏ.வி.எம்.சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏவிஎம் நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏ.வி.எம். சரவணன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ – அதே அளவுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் சரவணன் பங்கும் அளப்பரியது. புதல்வராகவும் – திரைத்துறை ஆளுமையாகவும் “அப்பச்சி” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏவி.எம்.க்கு புகழ் சேர்த்தவர். பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறனின் “குலதெய்வம்” என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்ப பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம்.சரவணன். கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் ஏவி.எம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும், எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த்:

இதேபோல ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சரவணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும், ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்