திருச்சி, மலைக்கோட்டை உச்சியில் பிரம்மாண்ட கொப்பரையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்…!* தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரிய ஏற்பாடு!
உலக பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை கோவிலின், மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவிலும், மலை நடுவே தாயுமானவர் மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழே மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களுள் கார்த்திகை மகா தீபம் பிரசித்தி பெற்றது. மலைக்கோட்டை உச்சியின் மீது பிரம்மாண்ட கொப்பரையில் ஏற்றப்படும் மகா தீபத்தைக் காண உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அந்தவகையில் இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று(3-12-2025) காலை பரணிதீபம் ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து தாயுமானவர் சன்னதியிலிருந்து மாலை 5.30 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டு, அங்கிருந்து தீபம் கொண்டு செல்லப்பட்டு, தாயுமானவர், மட்டுவார்குழலமை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, வாத்தியங்கள் முழங்க, 273 அடி உயரமும், 417 படிகள் கொண்ட மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில் முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொப்பரையில் 700 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி 300 மீ.அளவுள்ள பருத்தி துணியாலான மெகா திரியிட்டு மாலை 6 மணிக்கு வான வேடிக்கைகள் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்திபரவசத்துடன் வழிபட்டனர் . இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறநிலையத்துறையினர் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இந்த மகா தீபம் தொடர்ந்து 3 நாட்கள் இரவும், பகலும் அணையா வகையில் எரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.