பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வருகிற 19ம் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கி ஜனவரி மாதம் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. 21 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் 20ம் தேதி அன்று பகல் பத்து உற்சவம் தொடங்க உள்ளது. 30ம் தேதி இராபத்து உற்சவத்தின் முதல் திருநாள் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற உள்ளது. அன்று முதல், ராப்பத்து உற்சவம் தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. உற்சவ நாட்களில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதற்காக செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் அனைத்து துறை அலுவலர்களுடன் இன்று (டிச.2) ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கருதப்படுவதால் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், இந்து சமய அறநிலையத்தோடு இணைந்து அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். இந்நிலையில் சிறப்பு அனுமதி டிக்கெட் திருக்கோவிலில் கிடையாது என சட்டசபையில் அறிவித்த அறிவிப்பை தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்காக கடந்த ஆண்டு 700 ரூபாய் மற்றும் 4000 ரூபாய் வழங்கப்பட்ட சிறப்பு பாஸ் இந்த ஆண்டு கிடையாது. அதற்கு பதிலாக விஐபிகளுக்கு மட்டும் மாற்று பாஸ் வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் பாஸ்கள் வழங்கி விஐபிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

Comments are closed.