ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்…* திருச்சி கலெக்டர் வே.சரவணன் தலைமையில் நடந்தது!
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் அழைக்கப்படும் திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை தரிசித்து செல்வார்கள். நடப்பாண்டிற்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா விரைவில் தொடங்க உள்ளது. இதுதொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அரங்கநாதசுவாமி கோவிலில் இன்று (டிச. 2) நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் காமினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, மாநகர காவல் துணை ஆணையர் சிபின், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சீனிவாசன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் சிவராம்குமார், ஞானசேகரன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பக்தர்களுக்கு அந்தந்த துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சரவணன் எடுத்துக் கூறினார். பின்னர் கோவில் முழுவதும் சுற்றி பார்த்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

Comments are closed.