Rock Fort Times
Online News

மழைநீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு – அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மழை நிலவரம் குறித்து அவர் கூறியதாவது; ஆந்திராவுக்கு செல்லும் என கணிக்கப்பட்ட டிட்வா புயல், சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டதே அதீத மழைக்கு காரணம். நாளை காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. இது மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாமல்லபுரம் அருகே பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் மட்டும் 11 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. குழுவிற்கு 30 பேர் என 330 தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் தற்போது தயார் நிலையில் உள்ளனர். டிட்வா புயலால் சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2பேரும் உயிரிழந்தனர். மாநிலம் முழுவமும் 85,521.76 ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை நின்ற பின் பயிர்கள் கணக்கெடுப்பு முழுமையாக மேற்கொள்ளப்படும். முதல்-அமைச்சர் அறிவித்தபடி கனமழையால் தமிழ்நாடு முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 582 கால்நடைகள் உயிரிழந்தன. அவற்றின் உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்