Rock Fort Times
Online News

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை…!

கி.பி 1320 முதல் 1370 வரையிலான காலகட்டங்களில் முஸ்லிம் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் சூறையாடப்பட்ட நிலையில், நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50 ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில்108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கைசிக ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமிக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கு பட்டுபுடவைகள், மாலை மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு வந்திருந்தனர். இதனை திருமலை திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமையில் எடுத்துவந்து ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், தலைமை பட்டாச்சார்யார் சுந்தர்பட்டர் மற்றும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். முன்னதாக நம்பெருமாளுக்கான வஸ்திரங்கள் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்டு உள்பிரகாரங்களில் மேளதாளம் முழங்க வலம்வந்து மீண்டும் கோவிலை அடைந்தனர். பின்னர் இந்த வஸ்திரங்களை நம்பெருமாளுக்கும், தாயாருக்கும் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதில் ஸ்ரீரங்கம் கோவில் அலுவலர்கள், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் நரேஷ்குமார், பேஸ்கார் ஹிமத்கிரி, அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திருப்பதியில் இருந்து நம்பெருமாளுக்கு 365 நாட்களுக்கான வஸ்திர மரியாதை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்