Rock Fort Times
Online News

இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் மழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு…* அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடல்!

இலங்கையில் கடந்த வாரத்தில் தொடங்கிய கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. நிலைமை மோசமடைந்ததையடுத்து, இன்று (நவ.28) அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரி களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மத்திய மலைப்பகுதிகளில் அமைந்துள்ள பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளால் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின்படி, பதுளை மற்றும் நுவரெலியா பகுதிகளில் 21 பேர் காணாமல் போயுள்ளனர். நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. கடும் மழை காரணமாக பெரும்பாலான நீர்த்தேக்கங்களும், ஆறுகளும் நிரம்பி வழிவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாறைகள், மண் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால் பல பகுதிகளில் சாலைகள் மற்றும் ரயில் தடங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாகப் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே சிக்கித் தவித்த மக்களை மீட்க, விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் கடற்படையினர் படகுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அம்பாறை நகரத்திற்கு அருகே வெள்ள நீரில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் மூன்று பயணிகள் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்