Rock Fort Times
Online News

புதுச்சேரி அரசியலிலும் புயலை கிளப்ப போகும் விஜய்… ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி.யிடம் த.வெ.க.வினர் கடிதம்…!

மாஸ் ஹீரோவாக உள்ள விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற வெளி நாடுகளிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இவர் திடீரென நடிப்பதை நிறுத்திக் கொண்டு அரசியல் கட்சி தொடங்கினார். இவரது கடைசி படம் ஜனநாயகன். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர் தமிழக முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு பிறகு ஒரு மாதத்திற்கு மேல் மௌனம் காத்து வந்தார். அதிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ள அவர், அண்மையில் பொதுக்குழு கூட்டத்தையும், காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். சேலத்தில் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி அரசியலிலும் கால் பதிக்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக டிசம்பர் 5-ந் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ சென்று மக்கள் சந்திப்பை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இதற்கு தடை இருந்தாலும், அண்டை மாநிலமான புதுச்சேரியில் இதற்கு அனுமதி கிடைக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் நம்புகின்றனர். புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் புதுச்சேரி டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், எங்கள் கழகத் தலைவர் விஜய் சாலை மார்க்கமாக காலாப்பட்டில் தொடங்கி அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம். தவளகுப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வழியாக வருகை புரிந்து மக்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது கீழ்கண்ட இடத்தில் ஒலிப் பெருக்கியின் மூலமாக உரையாட உள்ளார். ஆகையால் இந்த நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி எங்கள் கழகத் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நாள்: 05.12.2025, வெள்ளிக்கிழமை நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தலைவர் உரையாற்றும் இடம்: உப்பளம், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க அருகில். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்