திருச்சியில் காலி மது பாட்டில்களை 10 ரூபாய்க்கு திரும்பப்பெற எதிர்ப்பு… * டாஸ்மாக் பணியாளர்கள் கடைகளை அடைத்து போராட்டம்…!
தமிழ்நாட்டிலுள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் மது பிரியர்கள் சிலர் அதனைக் குடித்துவிட்டு காலி பாட்டில்களை சாலைகளிலும், விவசாய நிலங்களிலும் தூக்கி வீசி எரிவதை தடுக்கும் பொருட்டு காலி மது பாட்டில்களை 10 ரூபாய்க்கு திரும்ப பெறும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இன்று(25-11-2025) முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஆனால், இந்த திட்டத்திற்கு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறையால் நாங்கள் வேலை செய்கிறோம், இந்த காலி மது பாட்டில்களை வாங்கி எங்கு வைப்பது?, அதற்கான இடம் எங்கே இருக்கிறது? என்பன போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆகவே, இந்த திட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டும் அல்லது கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி டாஸ்மாக் பணியாளர்கள் நேற்றைய தினம் டாஸ்மாக் முதுநிலை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக இன்று( நவ. 25) திருச்சி டாஸ்மாக் ஊழியர்களின் ஒரு பகுதியினர் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் நண்பகல் திறக்கப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் மூடிக் கிடந்தன. இதனால் மது பிரியர்கள் சிரமப்பட்டனர். இந்தநிலையில் டாஸ்மாக் மண்டல அதிகாரி, போராட்டம் நடத்தியவர்களுடன், விரைவில் உங்கள் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்து கடைகளை திறக்க அறிவுறுத்தினார். அதன்பேரில், ஊழியர்கள் டாஸ்மாக் கடைகளை திறந்தனர். கடை திறக்கப்பட்டதும் மது பிரியர்கள் கொண்டு வந்த காலி மது பாட்டிலை வாங்க ஊழியர்கள் மறுத்தனர். அதனால் ஊழியர்களுக்கும், மது பிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த பிரச்சனை குறித்து டாஸ்மாக் பணியாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தெரிவிக்கையில், சுற்றுலாத்தலங்களில் வனவிலங்குகள் பாதிக்கப்படுகிறது என்பதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது ஆனால், திருச்சி மாவட்டத்தில் காலி மது பாட்டில்கள் பெரும்பாலும் சாலைகளில், விவசாய நிலங்களில் வீசப்படுவது கிடையாது. எங்கோ கிடக்கும் காலி பாட்டில்களை எடுத்து வந்து மது பிரியர்கள் கொடுத்து தகராறு செய்கிறார்கள். ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் Poc மற்றும் ஸ்கேனர்கள் பயன்படுத்துவதில்லை. நாங்கள் இவற்றை பயன்படுத்தி வருகிறோம்.மேலும், ஆள் பற்றாக்குறை உள்ளது என்பதை முதுநிலை மண்டல மேலாளரிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். ஏற்கனவே எங்களுக்கு பணி சுமை அதிகமாக உள்ளது. இந்தத் திட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டும் அல்லது இதற்காக கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும்.இல்லையென்றால் போராட்டம் தொடரும் என்று கூறினார்.

Comments are closed.