திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி அதிகாலை பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 5 பேர் கும்பல் சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கிவிட்டு 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. கொள்ளையர்களால் ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவர் கொலை செய்யப்பட்டது தமிழ்நாட்டையே உலுக்கியது. தமது கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ கொல்லப்பட்ட செய்தி கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, பவாரியா கொள்ளையர்களை சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்ட தனிப்படை போலீசார், அடுத்த ஒரு மாதத்திலேயே கொள்ளையர்களை சுட்டுப்பிடித்தனர். இந்த வழக்கில் தனிப்படை போலீசார் 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஹரியானாவை சேர்ந்த ஓம் பிரகாஷ், ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் பெற்ற மூன்று பெண்கள் தலைமறைவானார்கள். கைது செய்யப்பட்ட ஓம் பிரகாஷ் பவாரியா உள்ளிட்ட இருவர் சிறையிலேயே உயிரிழந்தனர். அதில் கைது செய்யப்பட்ட ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயல்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சுமார் 86 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தீர்ப்பளித்தார். மேலும், ஜெயில்தார் சிங் தொடர்பாக நவம்பர் 24ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி இன்று(24-11-2025) அறிவித்தார். இதில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதே சமயத்தில், இந்த வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஜெயில்தாரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments are closed.