தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தைப் புதுப்பிப்பதற்கான உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் புதிய கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக் கூட்டம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (நவ.24) நடைபெற்றது. இக்கூட்டத்தில், நிதித்துறை முதன்மைச் செயலாளர் முனைவர். த.உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர்
மரு. சந்தரமோகன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் வ.நாராயணன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் மற்றும் கலைத் திட்ட வடிவமைப்புக் குழுத்தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ந.லதா மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், எளிமையான பாடத்திட்டத்தை உருவாக்குவது குறித்த கருத்துக்களைப் அவர்களிடம் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், 2026-27ம் கல்வி ஆண்டு முதல் படிப்படியாக பாடத்திட்டங்கள் மாற்றப்படும். செய்முறையாக கற்றல் எப்படி இருக்க வேண்டும், அதனை எப்படி செயல்படுத்த வேண்டும் என ஆலோசித்தோம். கற்றலும், கற்பித்தலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் புரிதலுடன் செய்முறையாக கற்றல் இருக்க வேண்டும் என்று கூறினார்.

Comments are closed.