கோவை செம்மொழி பூங்கா ஊழியர்களுக்கு, குப்பை வண்டியில் உணவு எடுத்து செல்லப்பட்டதற்கு, அ.தி.மு.க., கண்டனம் தெரிவித்துள்ளது. இது
தொடர்பாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், சமீபத்தில், ‘தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்’ என்ற பெயரில், ஒரு போட்டோஷூட் நிகழ்ச்சியை, முதல்வர் ஸ்டாலின் நடத்தினார். சென்னையில் 60 சதவீதம் பேருக்கு கூட, உணவு வினியோகம் செய்யப்படவில்லை. பல மணி நேரம் உணவுக்காக, தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக, செய்திகள் வருகின்றன. இது ஒருபுறம் இருக்க கோவையில் செம்மொழிப் பூங்கா ஊழியர்களுக்கு, குப்பை வண்டியில் உணவு எடுத்து செல்லப்பட்டது, அதிர்ச்சி அளிக்கிறது. குப்பை வண்டியில் சாப்பாடு எடுத்து சென்று இழிவுபடுத்துவதற்கு, இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தவே வேண்டாம் என்றே, சுயமரியாதை உள்ள யாருக்கும் தோன்ற செய்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குப்பை அள்ளுபவர்களுக்கு, குப்பை வண்டியில் சோறு போட்டால் போதும் என்று நினைக்கிறீர்களா முதல்வர் ஸ்டாலின்? கோவை காந்திபுரம் செம்மொழி பூங்காவில், பணிகளில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களுக்கு, கழிவுகளை ஏற்றிச் செல்லும் குப்பை வண்டியில் காலை உணவு அனுப்பி வைத்த தி.மு.க., அரசின் ஆணவம் அருவருக்கத்தக்கது, துளியும் மனிதாபிமானமற்ற செயல். எங்களுக்கு உணவளியுங்கள் என்று தூய்மை பணியாளர்கள் கேட்டனரா; ‘சோறு போடுகிறோம்’ என்ற போர்வையில், அவர்களின் சுய மரியாதையை சீண்டிப் பார்க்கிறீர்கள். விளிம்பு நிலை மக்கள் மீதான தி.மு.க.,வின் வெறுப்பு, இந்தளவிற்கு தரம் தாழ்ந்து போகும் என்று கனவில்கூட நினைக்கவில்லை. திமுக. அரசின் அகம்பாவ போக்கை மக்கள் கவனிக்கின்றனர். வரும் தேர்தலில், வட்டியும் முதலுமாக வாங்கி கட்டிக்கொள்ள தயாராகுங்கள். இவ்வா று அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.