Rock Fort Times
Online News

மத்திய அரசு நிராகரிக்கவில்லை: 2026-ல் மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்…- நயினார் நாகேந்திரன்…!

மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதாக இருந்த நிலையில், இது தொடர்பான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து அண்மையில் திருப்பி அனுப்பியது. இது, தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பல அரசியல் கட்சிகளும் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு பழி வாங்கும் நோக்கில் செயல்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நெல்லையில் இன்று(நவ.20) செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “கோவை- மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. திட்ட அறிக்கைகளை திருத்தி அனுப்புமாறே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை கோவைக்கு கொண்டு வரக் கூடாது என்ற நோக்கத்துடனேயே, அந்த திட்ட அறிக்கையை தமிழக அரசு தயாரித்துள்ளதாக தோன்றுகிறது. இதனை பகிரங்க குற்றச்சாட்டாகவே நான் வைக்கிறேன். கோவையில் ரயில் நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும் இடையேயான தூரம் குறைவாக இருக்கிறது. குறைந்தபட்சம் 22 மீட்டர் தூரமாவது இருக்க வேண்டும் என்பதே மெட்ரோ ரயில் திட்டத்தின் விதி. அதனால், சில விஷயங்களை திருத்தி அனுப்புமாறே மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, மதுரை, கோவை மெட்ரோ ரயிலுக்கான திருத்தப்பட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்ப வேண்டும். ஒருவேளை, அப்படி அனுப்பாவிட்டால், 2026ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மெட்ரோ ரயில் திட்டங்கள், பாஜகவால் செயல்படுத்தி காட்டப்படும்” என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்