தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் உள்ள தேசியக் கல்லூரியின் உடற்கல்வித் துறையில் தனது முனைவர் பட்ட ஆய்வை வெற்றிகரமாக முடித்துள்ளார். “இயந்திரக் கற்றல் மூலம் திறன் மேம்பாட்டிற்கான உடல் செயல்பாடு” என்ற தலைப்பில் 2021 முதல் முனைவர் பட்டப் படிப்பைத் தொடர்ந்து வந்தார். அவரது முனைவர் பட்ட விவா-வோஸ் தேர்வு இன்று(நவ. 17) மாலை 4-30 மணிக்கு திருச்சி தேசியக் கல்லூரியின் உட்புற அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் உடற்கல்வித் துறையின் துணை முதல்வரும், இயக்குநருமான டாக்டர் டி. பிரசன்னா பாலாஜியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் வெளிப்புற ஆய்வாளர் டாக்டர் எஸ். திருமலை குமார், அமைச்சரை முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என அறிவித்தார். முனைவர் பட்டத்திற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. உடற்கல்வி செயல்பாடுகள் பள்ளிக் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றன? கணினிசார் நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கற்றலுக்கு எவ்வாறு உதவுகிறது? என்பதை இந்த ஆய்வு பகுப்பாய்வு செய்தது. மேலும் உடற்கல்வி செயல்பாடுகள் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கத்தை இயந்திரக்கற்றல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆராயும் வகையிலும் அமைந்தது.

Comments are closed.