இந்தியாவின் முட்டை ஏற்றுமதியில் முக்கியப்பங்கு வகிக்கிற மாவட்டம், நாமக்கல். இந்த மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில், கோடிக்கணக்கில் முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. தினமும் கோடிக்கணக்கான முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு, நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைகளுக்கான விலையை, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி முட்டை ஒன்று அதிகபட்சமாக 5 ரூபாய் 90 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது நாமக்கல் மாவட்ட முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாக இருந்தது. இந்தநிலையில், தற்போது 11 மாதங்களுக்கு பிறகு முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன்படி, முட்டை ஒன்றின் கொள்முதல் விலை ரூ.6-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 55 ஆண்டுகால நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றிலேயே முதல் முறையாக முட்டை கொள்முதல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால், சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு முட்டை ரூ.7 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், “வடமாநிலங்களில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால், முட்டை உற்பத்தி குறைந்து நுகர்வு அதிகரித்துள்ளது. அதேபோல் வெளிநாடுகளுக்கு சாதாரணமாக 30 லட்சம் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு சுமாராக 1 கோடி முட்டைகள் வீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், மூலப்பொருட்கள் விலையும் கணிசமாக உயர்ந்ததால் முட்டையின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் முட்டையின் விலை நாமக்கல்லில் அதிகபட்சமாக 6 ரூபாய் 50 காசுகள் வரை உயரக்கூடும்” எனத் தெரிவித்தனர்.

Comments are closed.