திருச்சியின் அடையாளம் மலைக்கோட்டை. மலைக்கோட்டையின் மேல் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விநாயகர் சதுர்த்தி அன்று மலைக்கோட்டையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவதோடு விநாயகருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல் செய்யப்படும். இந்த கோவிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது மற்றொரு விசேஷம். ஆனால், இந்த தெப்பக்குளத்தை சுற்றி நான்கு புறமும் ஏராளமான தரைக் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் புத்தாண்டு, ரம்ஜான் போன்ற விசேஷ நாட்களில் இந்த வழியாக என்.எஸ்.பி. ரோட்டிற்கு செல்ல மிகவும் சிரமமாக இருந்தது. மேலும் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தெப்பக்குளத்தை எட்டிக்கூட பார்க்க முடியாத அளவுக்கு கரைக்கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. ஆகவே, அந்த கடைகளை அகற்றிவிட்டு தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்தி பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பக்த பிரமுகர்களும், திருச்சி வாழ் மக்களும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள கடைக்காரர்களுக்கு மாற்று இடம் வழங்க முடிவு செய்தது. சமூக ஆர்வலர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடை ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது சாலையோர வியாபாரம் நடத்தி வரும் கடைகளுக்கு உரிய மாற்று இடம் வழங்க இன்று (13.11.2025) மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமையில் நகர விற்பனை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தெப்பகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது சாலையோர வியாபாரம் நடத்தி வரும் கடைகளை மதுரைரோடு ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் பழைய நகராட்சி அலுவலகம் செயல்பட்ட இடத்தில் மாற்று இடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. தெப்பக்குளத்தை சுற்றியுள்ள கடைகளை 14.11.2025 அன்று மாலைக்குள் மாற்றி அமைத்துக் கொள்ளவும், கீழ்கரை பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளை காளியம்மன் கோவில் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாற்றியமைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டு திருச்சி மாநகராட்சி நகர விற்பனை குழு அனைத்து உறுப்பினர்களும் கலந்து ஆலோசித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார். நீண்ட கால போராட்டத்திற்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.