Rock Fort Times
Online News

திருச்சி காவிரி புதிய பாலம் கட்டுமான பணி அடுத்த மாதம் முடிவடையும்… அமைச்சர் கே.என்.நேரு!

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.119.92 கோடி மதிப்பீட்டில் மணிகண்டம் மற்றும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 174 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஜி.எஸ்.சமீரன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை பொறியாளர் என்.ஜெயக்குமார், நிர்வாக பொறியாளர்கள் பரிமளாதேவி, ராஜகோபால், மணிகண்டம் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கமலம் கருப்பையா, அந்தநல்லூர் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ச.துரைராஜ் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதரணி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  BLO என்பது அரசு அலுவலர், BLA2 என்பவர் அரசாங்கத்தால் தேர்தல் ஆணையத்தால் கையெழுத்து போட்டு அதிகாரம் கொடுத்துள்ளனர். ஒரு நாளைக்கு 50 ஓட்டு சேர்க்கலாம் என அதிகாரம் கொடுத்துள்ளனர். திமுக மட்டும் இல்லை யார் வேண்டுமானாலும் அனுமதி பெற்றுக்கொண்டு SIR படிவம் நிரப்பும் அதிகாரியுடன் செல்லலாம். யாருக்கு ஓட்டு போட வேண்டும் என திமுகவினர் கூறவில்லை. அதிமுகவினரும் வருகிறேன் என்று கூறினார்கள், வாருங்கள் என்று தான் கூறினோம். எவ்வளவு மழை வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் அரசு அதிகாரிகள் தயாராக இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.  திருச்சி காவிரி புதிய பாலம் கட்டுமான பணி அடுத்த மாதத்தில் முடிவடைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார். அதிமுக- பாஜக சேர்ந்து இருந்திருந்தால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்போம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது குறித்த கேள்விக்கு. அதிமுக – பாஜக சேர்ந்து பெற்ற வாக்கை கூட்டப் பாருங்கள். 25 தொகுதிகளில் எப்படி வெற்றி பெற முடியும் என்பது தெரியும். அதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்