பட்டா கொடுத்தாங்க… இன்னும் இடம் கொடுக்கல… திருச்சி, சிந்தாமணி பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது…! (வீடியோ இணைப்பு)
திருச்சி, மேல சிந்தாமணியில் இருந்து ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மேல சிந்தாமணி சத்யா நகர் பகுதியில் ஆற்று புறம்போக்கு இடத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர். பால கட்டுமான பணிகளுக்காக இந்த இடம் அரசால் கையகப்படுத்துவதற்கான ஆணை தீபாவளிக்கு முன்பாகவே ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு குடி இருந்தவர்களுக்கான மாற்று இடம் பஞ்சப்பூர் அருகே அரசின் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், அது எந்த இடம், எங்கள் ஒவ்வொருவருக்கான இட ஒதுக்கீடு என்ன? என்பது போன்ற விபரங்கள் அதிகாரிகள் தரப்பில் இன்றுவரை தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, முறையாக அரசு சார்பில் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகே இந்த இடத்தை நாங்கள் அரசாங்கத்திற்கு ஒப்படைப்போம் என இப்பகுதி மக்கள் தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று(12-11-2025) காவல்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றுடன் இணைந்து நீர்வளத்துறை இந்த குடியிருப்பு பகுதிகளை திடீரென எடுத்ததாக தெரிகிறது. இதனால் இப்பகுதி மக்கள் காவிரி பாலத்தை மறித்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது., இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசின் சார்பில் பஞ்சபூருக்கு அருகே ஏற்கனவே மாற்று இடம் கொடுக்கப்பட்டு விட்டது. தீபாவளிக்கு முன்னதாகவே இடத்தை காலி செய்வதற்கான அறிவிப்பு முறையாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கொடுக்கப்பட்டு விட்டது. அறிவிப்பு கொடுத்து 21 நாட்களுக்குள் இடத்தை பொதுமக்கள் காலி செய்ய வேண்டும். ஆனால் 50 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் இடத்தை காலி செய்யவில்லை. இதனால் தற்போது காவல்துறை வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளோடு இந்த இடத்தை கையகப்படுத்தியுள்ளோம் என தெரிவித்தனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.


Comments are closed.