பதவியேற்ற 10 மாதத்தில் ‘100 குண்டாஸ்’- குற்றவாளிகளை தெறிக்க விடும் திருச்சி எஸ்.பி.செல்வ நாகரத்தினம்…!
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வருண்குமார் ஐபிஎஸ் பதவி வகித்து வந்தார். அவருக்கு பதவி உயர்வு கிடைத்ததால் திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக செல்வ நாகரத்தினம் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த ஜனவரி மாதம் எஸ்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் பதவி ஏற்ற நாள் முதல் திருச்சி மாவட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், கள்ளத்தனமாக மது விற்பவர்கள், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பவர்கள், கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள், புகையிலை பொருட்களை பதுக்கி விற்பவர்கள் என அனைவரையும் தட்டி தூக்கினார். மேலும், இரவு நேர ரோந்து பணியை தீவிர படுத்தியதோடு அடிக்கடி கண்காணித்து காவல் பணியினை முடுக்கி விட்டார். சரித்திர பதிவேடு குற்றவாளிகளை லிஸ்ட் எடுத்து இரவோடு, இரவாக தட்டி தூக்கினார். இதனால், குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டதால் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்தன. அதோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 100 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டார். அவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர். சமீபத்தில் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 10 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் பல்வேறு மாநிலங்கள் கடந்து சென்று குற்றவாளிகளை கைது செய்ததுடன் 10 கிலோ தங்க நகைகளையும் மீட்டு தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்தார். திருச்சி மாவட்ட காவல்துறை வரலாற்றில் பத்து மாதத்தில் 100 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அவரை சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Comments are closed.