விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்தில், சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில், அதே கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து (60), சங்கர பாண்டியன் (50) ஆகியோர் காவலாளியாக பணியாற்றி வந்தனர். இருவரும் கடந்த 10ம் தேதி இரவு கோயிலில் இரவு பணியில் இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவர்களை கத்தியால் வெட்டிக் கொன்றனர். மேலும், கோயிலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அதிகாலையில் கோயிலுக்கு வந்தவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கோயிலில் இருந்த உண்டியலை உடைக்க முயற்சி செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, கோயிலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு டிஎஸ்பி பஸினா பீவி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருத்தப்படும் நாகராஜ் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். படுகாயமடைந்த நாகராஜை, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர். இந்தசம்பவத்தில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுவதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாகராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் கஸ்டடியில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்துவிடுவோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Comments are closed.