தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம் உள்ளிட்டவைகளை மேற்கோள்காட்டி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதேபோன்று பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் இன்று(11-11-2025) விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் “SIR நடத்தப்படும் காலம் பருவமழைக் காலம். அப்போது அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த நேரத்தில் SIR பணி மேற்கொள்ள முடியாது. வருவாய்த்துறை அதிகாரிகள், வேறு மாநில அதிகாரிகள் பருவமழை வெள்ளம் தொடர்பான பணிக்காக ஈடுபடுத்தப்படுவார்கள். இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் அறுவடை திருவிழாவான பொங்கல் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். அந்த நேரத்தில் SIR பணி மேற்கொள்வது சிக்கலை ஏற்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிமன்றம், தேர்தல் ஆணையம் இதற்கான அனைத்து விளக்கங்களையும் கொடுப்பார்கள் என பதில் அளித்தது. அதன்பின், மலைக்கிராமங்கள் போன்ற இடங்களில் இணையதள வசதி கிடைப்பது சிரமம். சரியாக ஒருமாதம் இருப்பதால் வாக்காளர்களுக்கு போதிய கால அவகாசம் இருக்காது என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. என்றாலும், உச்சநீதிமன்றம் இது தொடர்பாக அனைத்து மனுக்களின் நகல்களையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்தல் ஆணையம் அதற்கு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தது. அத்துடன் SIR தொடர்ந்து நடைபெறலாம் என உத்தரவிட்டது.

Comments are closed.