Rock Fort Times
Online News

திமுகவிற்கு மாற்று புரட்சித் தலைவர் ஆரம்பித்த அதிமுக தான்- மு.க.ஸ்டாலினுக்கு மாற்று பழனிச்சாமி என்பதை மக்கள் நிராகரித்து ஆண்டுகள் ஐந்தாயிற்று… திருச்சி மாநகர் மாவட்ட அ.ம.மு.க செயலாளர் செந்தில்நாதன் அறிக்கை!

திருச்சி மாநகர் மாவட்ட அ.ம.மு.க செயலாளர் ப. செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- திமுகவிற்கு மாற்று புரட்சித் தலைவர் ஆரம்பித்த அதிமுக தான், இதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. ஆனால், மு.க. ஸ்டாலினுக்கு மாற்று பழனிச்சாமி என்பதை மக்கள் நிராகரித்து ஆண்டுகள் ஐந்தாயிற்று. இதனை அரசியல் அறிந்தவர்கள் அறிவார்கள். கட்சி தான் முக்கியம் அதை வழிநடத்தும் தலைமை முக்கியமல்ல என்று மக்கள் நினைத்து இருந்தால், 1920ம் ஆண்டு முதல் 1937ம் ஆண்டு வரை மொத்தம் 18 ஆண்டுகள் இத் தமிழ்நாட்டை ஆண்ட ஜஸ்டிஸ் பார்ட்டி தான் இன்றளவும் ஆட்சி செய்திருக்கும். அதேபோல், சின்னம் தான் முக்கியம் அதை வழிநடத்தும் தலைமை முக்கியமல்ல என்று மக்கள் நினைத்து இருந்தால், 1937ம் ஆண்டு முதல் 1967 வரை, 31 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் இன்றளவு ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும். ராஜராஜ சோழனின் கையில் இருந்த வாளும், சாளுக்கிய மன்னனின் கையில் இருந்த வாளும் ஒரே உலோகத்தால் செய்யப்பட்டது தான். அதே வாள் தான். அதே ஆயுதம்தான். ஆனால் அவ்வாயுதம் யார் கையில் இருக்கிறது என்பதை பொறுத்து தான், போரின் வெற்றி, தோல்விகள் அமையும். விறுப்பு வெறுப்புகளை ஒதுக்கி பார்த்தால், துரோகத்தை எதிர்த்து புரட்சித் தலைவர் ஆரம்பித்த அதிமுக இன்று நம்மிடம் இல்லை என்பது புலப்படும். இதை உணராமல், உணர்ந்தும் வாய் மூடி பயணித்தல் என்பது, தீரமிக்க உண்மையான புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி தொண்டர்களின் குணம் அல்ல. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் ஆற்றல், தீரம், விவேகம் எங்கு உள்ளது என்பதை உண்மையான அதிமுகவினரின் மனம் அறியும். இன்னும் சிறிது காலம் இருக்கிறது. வருங்காலம் பழிக்காமல் இருக்க தன்மானத்துடன் கைகோர்த்து, வெற்றிக் கனியை பறிக்கலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்