தமிழகத்தின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை, 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 16ம் தேதி உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பஸ்களில் 90 நாட்களுக்கு முன்பாகவும், ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனால், கடைசி நேர நெரிசலில் சிக்கி பயணிப்பதைத் தவிர்க்க முன்கூட்டியே பயணிகள் திட்டமிட்டு முன்பதிவு செய்வது வழக்கம். அந்தவகையில், ரெயில்களில் பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஜனவரி 9ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவ 10) காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து, பயணிகள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். வைகை எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் உள்ளிட்ட முக்கியமான ரயில்களில் டிக்கெட்டுகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

Comments are closed.