நாட்டில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கில் இந்திய விலங்குகள் நல வாரியத்தையும் ஒரு தரப்பாகச் சேர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையின் ஆரம்பத்திலேயே பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று தங்கள் தரப்பு பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்திருந்ததாக சொலிசிட்டர் ஜெனரல் சிறப்பு நீதிபதிகள் அமர்விடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பிரமாணப்பத்திரங்களை ஆய்வு செய்து ஒருங்கிணைந்த அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அனைத்து மாநில தலைமைச் செயலர்களும் அடுத்த விசாரணையில் ஆஜராக வேண்டியதில்லை என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவை அலட்சியமாக கையாள்ந்ததாலேயே தலைமைச் செயலர்களை ஆஜராகுமாறு உத்தரவிட்டதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சரியாக கையாளாவிட்டால் மீண்டும் இவர்கள் நேரில் ஆஜராகும் நிலை ஏற்படும் என்று சுட்டிக்காட்டியதோடு, நவம்பர் 7ஆம் தேதி தெரு நாய்களை கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை வழங்கும் எனவும் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, இன்றைய தினம் தெரு நாய்களை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி, தெரு நாய்களை கட்டுப்படுத்த ரோந்து குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு, நெடுஞ்சாலைகளில் திரியும் தெரு நாய்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் நாய்கள் நுழையாதபடி சிறப்பு வேலிகள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.