Rock Fort Times
Online News

இந்திய பொருளாதாரத்தை மாற்றிய ஜி.எஸ்.டி விழிப்புணர்வு விளக்க உள்அரங்க கூட்டம்… – திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க பொருளாதார பிரிவு சார்பில் நடைபெற்றது!

நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரியை மத்திய பா.ஜ.க அரசு சமீபத்தில் இரண்டு அடுக்குகளாக மாற்றி அமைத்தது. இது குறித்த கட்சி நிர்வாகிகளுக்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று(04-11-2025) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதார பிரிவு மாநில தலைவர் காயத்ரி சுரேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளர் டி.ரிகன்யா, திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர்கள் எம்.காளீஸ்வரன், ஏ.என்.எம் அழகேசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை திருச்சி மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் கே.எஸ்.சங்கர் கணேஷ் வரவேற்றார். தொடர்ந்து மாநிலச்செயலாளர் டி.ரிகன்யா அறிமுக உரையாற்றினார். மாநில தலைவரான காயத்ரி சுரேஷ் பேசும் போது., ஜிஎஸ்டி வரி குறைப்பால் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில் குறைந்து இருக்கிறது. இதனால் ஏராளமான பொதுமக்கள் தினம்தோறும் பலன்களை அனுபவித்து வருகின்றனர். தொழில் துறையும் பல்வேறு வளர்ச்சி கட்டங்களை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. மத்திய அரசு இதுபோன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருவதால் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வை கட்சி நிர்வாகிகளான நாம் அனைத்துத்தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதில் ஆர்வத்தோடு செயல்பட வேண்டும். உங்கள் மாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து கொடுக்கலாம். உங்கள் பகுதியில் தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவித்து தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கினால் அவர்களின் பார்வை நமது கட்சியின் மீது விழும். குடிசை வீட்டில் இருந்தவர்கள் கூட கடந்த 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வாழ்வியல் மாற்றங்களை உணர்ந்துள்ளனர். கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் இந்தியா துணிச்சலோடு எதிர் கொண்டது. இதற்கெல்லாம் அடிப்படை பா.ஜ.க அரசின் பொருளாதார கொள்கைதான். இதையெல்லாம் மக்களிடம் தெளிவாக கொண்டுபோய் சேர்க்க வேண்டும். தெருமுனை பிரச்சார கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்குதல், வீடுகள் தோறும் திண்ணை பிரச்சாரங்கள் மேற்கொள்ளுதல் போன்றவற்றை செய்ய வேண்டும் என பேசினார். இந்நிகழ்ச்சியில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்