உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதல் முறையாக சாம்பியன்: ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் உள்ளிட்ட பலர் வாழ்த்து…!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் இந்திய மகளிர் அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 87 ரன்களையும், தீப்தி சர்மா 58 ரன்களையும் எடுத்தனர். பின்னர் 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன், விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் லாரா வோல்வார்ட் அபாரமாக விளையாடி சதம் விளாசியதுடன், 101 ரன்களை எடுத்தார். ஆனால் மற்ற வீராங்கனைகள் பெரிதளவில் சோபிக்க தவறியதால், 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இதனையடுத்து இந்திய மகளிர் அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது பதிவில், இந்த வெற்றி மகளிர் கிரிக்கெட்டை இன்னும் உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில், ” கோப்பையை வென்ற வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்று வெற்றி, எதிர்கால சாம்பியன்களை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கும்” என்று பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சார் மு.க.ஸ்டாலின்: இந்த வெற்றி அடுத்த தலைமுறையினரை பெரிய கனவுகளைக் காணவும், தைரியமாக விளையாடவும் ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்: 1983 உலகக் கோப்பையை இந்தியா வென்றதன் மூலம், அடுத்த தலைமுறையினரை பெரிய கனவுகளைக் காணவும், அந்தக் கனவுகளைத் துரத்தவும் தூண்டியது. அதைப்போல் இன்று, நமது மகளிர் கிரிக்கெட் அணி சிறப்பான ஒன்றைச் செய்துள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட்டின் பயணத்தில் இது ஒரு அற்புதமான தருணம். வாழ்த்துகள் டீம் இந்தியா, நீங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்: இந்திய மகளிர் அணி உலக கோப்பையை வென்றிருப்பது என்பது நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று தெரிவித்துள்ளார். இதேபோல அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள், இந்நாள் வீரர்கள் பலர் பாராட்டியுள்ளனர்.

Comments are closed.