தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு படி முன்னே சென்று தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் இம்மாதம் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 5.11.2025 புதன் கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையிலும், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், கே.ஏ.செங்கோட்டையன் ஒன்றாக சந்தித்த நிலையிலும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Comments are closed.