அதிமுக ஆட்சியின் போது அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவருக்கும், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க கடந்த செப்டம்பர் 5ம் தேதியன்று கெடு விதித்த செங்கோட்டையன் அதற்கு மறுநாளே கட்சியில் அவர் வகித்து வந்த பதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் செங்கோட்டையன் ஒன்றாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் அவர் இன்று(31-10-2025) அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தாலும், கழகத்தில் இருப்பவர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிந்திருந்தும் அவர்களுடன் ஒன்றிணைந்து கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
***

Comments are closed.