Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி…!

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் முகூர்த்தகால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் மணல் வெளியில் இன்று(31-10-2025) நடைபெற்றது. அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பட்டாச்சார்யார்கள் முன்னிலையில் முகூர்த்தக்கால் பூஜிக்கப்பட்டு பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்கிட முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சொர்க்கவாசல் திறப்பு வைகுண்ட ஏகாதசியானது பகல்பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் விழாவில் டிசம்பர் 20ம் தேதி முதல் பகல்பத்து திருவிழா தொடங்கி 09.01.2026ம் தேதி வரை நடைபெறுவதுடன், டிசம்பர் 29ம் தேதியன்று மோகினி அலங்காரமும், முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு வைபவம் டிசம்பர் 30ம் தேதி அதிகாலை 5:45 மணிக்கு நடைபெறுகிறது. விழா ஏற்பாட்டினை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்