Rock Fort Times
Online News

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை: * ஆன்லைன் நாளை முன்பதிவு தொடங்குகிறது!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து விரதம் இருந்து சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக நவம்பர் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெறுகிறது. இதனால் நவம்பர் 17-ம் தேதி முதல் டிசம்பர் 27-ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். தினமும் வழக்கமான பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சாமி தரிசனம் செய்ய கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அந்த முறை அமல்படுத்தப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர், உடனடி முன்பதிவு மூலமாக 20 ஆயிரம் பேர் என தினமும் 90 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மண்டல பூஜை காலம் மட்டுமின்றி, மகரவிளக்கு பூஜை காலத்திலும் இந்த முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மண்டல பூஜை காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை (நவம்பர் 1) தொடங்குகிறது. பக்தர்கள் தாங்கள், சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய தினத்தை தேர்வு செய்து, கேட்கக்கூடிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்து முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்ததற்கான அனுமதி சீட்டு புக்கிங் செய்யக்கூடிய இ மெயில் முகவரிக்கு அனுப்பப்படும். ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்கள் மரணமடைந்தால், அவர்களது குடும்பத்திற்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காகதான் ஆன்லைன் முன்பதிவு கட்டணமாக பக்தர்களிடம் 5 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. ஆனால், இந்த கட்டணம் கட்டாயமில்லை என்றும், விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த கட்டணதை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்