Rock Fort Times
Online News

உழைத்த உழைப்புக்கு உரிய விலை கிடைக்காததால் விரக்தி: காவிரி ஆற்றில் தக்காளியை மூட்டை, மூட்டையாக கொட்டிய விவசாயிகள்!

சமீப காலமாக தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். தக்காளி நடவு பணி, தண்ணீர் பாய்ச்சுதல், உரம் போடுதல், அறுவடை செய்தல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு செலவுகள் அதிகரித்து வருகிறது. ஆனால், செலவுக்கேற்ற
விலை கிடைப்பதில்லை. மிகவும் குறைந்த விலைக்கே மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் 25 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாலும், மார்க்கெட்டில் போதிய விலை கிடைக்காததாலும் விரக்தி அடைந்த விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைவித்த தக்காளியை மொத்த சந்தைக்கு கொண்டு செல்லாமல் மூட்டை, மூட்டையாக திருச்சி காவிரி ஆற்றில் கொட்டினர். காவிரி கரையோரங்களிலும் கொட்டினர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததாலும், இடைத்தரகர்கள் ஆதிக்கத்தினாலும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றோம். தக்காளிக்கு கேட்கப்படும் விலை வண்டி வாடகைக்கு கூட போதவில்லை. இதனால் வேறு வழியின்றி ஆற்றில் கொட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தக்காளிக்கு உரிய விலை கிடைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்