திருச்சி மாவட்ட சகோதயா பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டி: திருச்சி காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை…!
திருச்சி மாவட்ட சகோதயா பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டிகள் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் 31 சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். திருச்சி ராக்சிட்டி சகோதயா அமைப்பு ஏற்படுத்திய இந்த தடகளப் போட்டியானது, பள்ளிகளுக்கு இடையே நல்லுறவையும், ஒற்றுமையையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. போட்டிகளை சிறப்பு விருந்தினர் திருச்சி என்.ஐ.டி.பதிவாளர் முனைவர் எஸ்.ஏ.செந்தில்குமார் தொடங்கி வைத்து இதுபோன்ற போட்டிகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி தங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும், இப்போட்டியில் பங்குபெறும் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் வெற்றியாளர்களே என பாராட்டினார். இப்போட்டிகளில் திருச்சி காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் திறமை வெளிப்படுத்தி 10 தங்கப் பதக்கங்களையும், 11 வெள்ளிப் பதக்கங்களையும் மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றனர்.

மேலும், இரண்டு தனிநபர் விளையாட்டு வெற்றியாளர் பட்டங்களையும், மாண்ட்போர்ட் பள்ளிக்கு ஒட்டுமொத்த சுழற்கேடயத்தையும் பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் திருச்சி ராக்போர்ட் சகோதயா அமைப்பின் செயலாளர் தயானந்தன், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கினார். மாண்ட்போர்ட் பள்ளியின் முதல்வர் அருட்சகோதார் ராபர்ட், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்ததோடு வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டினார். மேலும் இந்நிகழ்ச்சி சிறப்பான நடைபெற பெரிதும் பங்காற்றிய நிகழ்ச்சி அமைப்பாளர்கள், ஆசிரியர்கள், உதவியாளர்கள், மற்றும் திருச்சி கே.எம்.சி. மருத்துவமனையின் முதலுதவி குழு என அனைவரையும் பெரிதும் பாராட்டினார்.

Comments are closed.