Rock Fort Times
Online News

கரூர் கற்றுத்தந்த பாடம்: ரூட்டை மாற்றும் விஜய்… இனி ரோடு ஷோ கிடையாது, ஹெலிகாப்டரில் வந்து பிரச்சாரம்…!

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்னும் அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவில்லை. இந்த சம்பவத்துக்கு ஆளுங்கட்சியின் சதிதான் காரணம் என தவெக-வினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பிறகு தவெக-வுக்கு தாமாகவே சென்று அதிமுகவும், பாஜகவும் ஆதரவுக் கரம் நீட்டுகின்றன. கரூர் கற்று தந்த அரசியல் பாடத்தால் விஜய் விழித்துக்கொண்டுள்ளதாகவும், இனி ரோடு ஷோ கிடையாது, ஜெயலலிதா பாணியில் ஹெலிகாப்டரில் பிரச்சாரம் நடக்கும் இடத்துக்கு சென்னையில் இருந்து நேரடியாக வரவும், கூட்டம் முடிந்ததும் ஹெலிகாப்டரிலேயே திரும்பிச் செல்லவும், ரசிகர்கள் அன்புத் தொல்லையை தவிர்க்க சாலை மார்க்கத்தை விஜய் கைவிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தவெக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘இன்னும் சில வாரங்களில் திட்டமிட்டபடி விஜய் பிரச்சாரத்துக்கு செல்ல தயாராகிவிட்டார். இந்த தேர்தலில் 41 பேர் உயிரிழப்பை வைத்து விஜய்யை அரசியலைவிட்டு அப்புறப்படுத்த நினைத்தார்களோ, அதற்கு நியாயம் கேட்கும் கேள்விகள் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும். அதேநேரத்தில் பிரச்சாரத்தையும், ஜெயலலிதா பாணியில் தொடங்கத் தயாராகிவிட்டார். விஜய் பிரச்சாரத்துக்கு செல்லும் நகரத்துக்கு வெளியே பிரம்மாண்டமான பட்டா நிலத்தை தேர்வு செய்து, அதில் சுமார் 1 லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அங்கு விஜய் நேரடியாக ஹெலிகாப்டரில் வரும் வகையில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படுகிறது. இதற்காக, பெங்களூருவை சேர்ந்த ஒரு ஹெலிகாப்டர் நிறுவனத்திடம் 4 ஹெலிகாப்டர்களுக்கு ஓர் ஆண்டுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பிரச்சாரம் மாலை 5 மணி என்றால் விஜய் சரியாக 4.45 மணிக்கே ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்கு கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். கட்சியினர், பொதுமக்களை காக்க வைத்தல், சாலையில் வருவதால் நெரிசல், போக்குவரத்து ஸ்தம்பிப்பு போன்ற புகார்களை தடுக்கவே விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த பிரச்சார பாணியை பின்பற்றி ஜெயலலிதா ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ளதால், விஜய் இந்த முடிவுக்கு சம்மதித்துள்ளார்’’ என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்