திருச்சி, திருப்பராய்த்துறை அகண்ட காவிரியில் ஐப்பசி துலாஸ்நானம்…* பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடி வழிபாடு!
ஐப்பசி முதல் தேதியன்று காவிரி நதியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர். துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும், பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவிரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அகண்ட காவிரியில் ஐப்பசி முதல் நாளில் நடைபெறும் முழுக்கு முதல் முழுக்கு என்றும், மயிலாடுதுறையில் ஐப்பசி கடைசி நாளில் கடைமுழுக்கு நிகழ்வும் நடைபெறும். அந்த வகையில் திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை காவிரி கரையில் அமைந்துள்ள தாருகாவனேசுவர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் முதல்நாள் துலாஸ்நான விழா நடைபெறும். இதனையொட்டி இன்று(அக்.18) காலை மூலஸ்தான சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. அதன்பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமஸ்கந்தர் அம்பாள், பசும்பொன் மயிலாம்பிகை சுவாமிகள் திருக்கைலாய வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் வீதிஉலாவந்து அகண்ட காவிரியை வந்தடைந்தனர். அதன் பின்னர் திருக்கோவிலில் யாகபூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களால் காவிரி ஆற்றில் ஊற்றப்பட்டதுடன், தொடர்ந்து அஸ்திர தேவருக்கு விபூதி, மஞ்சள், சந்தனம், இளநீர், அரிசி மாவு, பால், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. அஸ்திர தேவருடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி சுவாமி மற்றும் அம்பாளை வழிபட்டனர்.
Comments are closed.