தீபாவளிக்கு நாளை முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாம்பரம் – செங்கோட்டை இடையே தீபாவளி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து நாளை (அக்.17 ) இரவு 7.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் (வ.எண் 06013) மறுநாள் காலை 7.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து 20-ந்தேதி (தீபாவளி அன்று) இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06014) மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது. இந்த சிறப்பு ரெயிலில் 1 ஏ.சி. இருக்கை வசதி பெட்டி, 11 இருக்கை வசதி பெட்டி, 4 பொதுப் பெட்டி, 2 இரண்டாம் வகுப்பு பெட்டி என மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து நாளை(வெள்ளிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் (06161) மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரையை சென்றடையும். இந்த ரெயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இணைகக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. மேலும், மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ந்தேதி முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அன்று இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது. அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு 18-ந்தேதி முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது. அன்று இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு மதுரையை சென்றடையும். மேலும், மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு 21-ந்தேதி இரவு 8.30 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 4.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.