சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்தமாதம் தொடங்க உள்ளது. மண்டல பூஜைக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தற்போதே தொடங்கி நடந்து வருகின்றன. இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜை நாளை மறுநாள் (18-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார். நாளை மாலை சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை மறுநாள் முதல் வருகிற 22-ந்தேதி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஜனாதிபதி திரவுபதி முர்பு வருகிற 22-ந்தேதி சபரிமலைக்கு வருகிறார். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக 21 மற்றும் 22 ஆகிய 2 நாட்கள் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களுக்கான ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 18, 19 மற்றும் 20-ந்தேதி மட்டும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு நாளை மறுநாள் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. சபரிமலை மேல்சாந்தி பொறுப்புக்கு 14 பேரும், மாளிகைபுரம் மேல்சாந்தி பொறுப்புக்கு 13 பேரும் நேர்முக தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோவில்களுக்கு தனித்தனி மேல்சாந்தி குடவோலை முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளனர். புதிய மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்படுபவர்கள் நடப்பு ஆண்டு மண்டல பூஜை முதல் ஒரு ஆண்டு காலத்திற்கு சபரிமலையில் தங்கியிருந்து அனைத்து பூஜைகள் மற்றும் திருப்பணிகளை நிறைவேற்றுவார்கள்.
Comments are closed.