தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். கார் உள்ளிட்ட சொந்த வாகனங்கள் இல்லாதவர்கள் ரெயில், அரசு பேருந்து மற்றும் ஆம்னி பேருந்து சேவையை பயன்படுத்துவார்கள். வருகிற 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விலையை வழக்கமான கட்டணத்தை விட 4 மடங்கு உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு குளிர்சாதன படுக்கை வசதி பஸ்சில் ரூ.4,399ம், நெல்லைக்கு ரூ.3,999-ம், தூத்துக்குடிக்கு ரூ.4,085, மதுரைக்கு ரூ.3,932, திருச்சிக்கு ரூ.3,899, கோவைக்கு ரூ.4,420, சேலத்துக்கு ரூ.4,110 என்று அதிகபட்சமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஆணையர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் பயணிகள் புகார் தெரிவிக்க மாவட்டவாரியாக செல்போன் எண்களும் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் போக்குவரத்து ஆணையர் கஜலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, 4 மடங்கு உயர்த்தப்பட்ட ஆம்னி பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு 30 சதவீதம் வரையிலும், திருச்சி, கோவை, சேலம் ஆகிய ஊர்களுக்கு 50 சதவீதம் வரையிலும் கட்டணம் குறைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஆம்னி பேருந்துகளுக்கு வெளியிடப்பட்ட கட்டண அட்டவணைப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
Comments are closed.