Rock Fort Times
Online News

தீபாவளி நாளன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி- தமிழக அரசு…

தீபாவளி தினத்தன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்றுமாசினால் சிறுவர்கள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள் உடல் மற்றும் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவின் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை மட்டும் உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்தது. அந்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018ம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.”

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்