பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில்தான் இந்த துயரமான நிகழ்வு நடைபெற்றுள்ளது. பிஞ்சு குழந்தைகளின் உயிரை பலிகொண்ட அந்த மருந்தின் பெயர் ‘கோல்ட்ரிப்’ என்பதாகும். இந்த மருந்தை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், நிறுவனத்தை சரிவர ஆய்வு செய்யாத இரண்டு அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த இருமல் மருந்து எப்படி குழந்தைகளுக்கு விஷமாக மாறியது என்ற கேள்விக்கான பதிலாக, முதல்கட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அந்த மருந்தில் டை எத்திலீன் கிளைகால் என்ற ரசாயனப் பொருள் மிக அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவே குழந்தைகள் மரணத்திற்கு நேரடி காரணம் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. டை எத்திலீன் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் ஆகியவை தொழில்துறையில் கரைப்பான் மற்றும் பனி உரைக்கும் ரசாயனங்களாக பயன்படுத்தப்படுகின்றன. இவை மனித உடலில் சேரும் போது மிக ஆபத்தானவை. உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்ட எச்சரிக்கையின் படி, மிகக் குறைந்த அளவில்கூட இதை உட்கொண்டால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். குறிப்பாக குழந்தைகளுக்கு இது உயிருக்கு மிக ஆபத்தானது. பொதுவாக இருமல் மருந்துகளில் ப்ராபிலீன் கிளைகால் என்ற செயலற்ற சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தரமற்ற வியாபாரிகள், மலிவான மாற்று ரசாயனமாக டை எத்திலீன் கிளைகாலை சேர்த்து மருந்து தயாரித்துள்ளனர். இதன் விளைவாக, அந்த சளி மருந்தில் டை எத்திலீன் கிளைகால் அளவு அனுமதிக்கப்பட்ட 0.1 சதவீதத்திற்கு பதிலாக 46 சதவீதம் வரை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அளவிலான விஷப்பொருள் தான் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது.
மேலும், மருந்து தயாரிப்பு விதிகள் கடுமையாக மீறப்பட்டிருப்பதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததாவது, 2022 முதல் இதுவரை உலகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இத்தகைய விஷமருந்துகள் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இந்திய மருத்துவ சங்கம் (IMA) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், பெரும்பாலான சளி மற்றும் குளிர் நோய்கள் இயல்பாகவே சில நாட்களில் குணமாகிவிடும். எனவே, 2 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு எந்தவிதமான இருமல் மருந்தும் கொடுக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.