தீபாவளி நாளில் பட்டாசு சத்தத்திலிருந்து செல்லப்பிராணிகளை பாதுகாப்பது எப்படி?* பெட் கேலக்ஸி நிறுவனர் ஹில்டா சகாயமரி நித்யா அறிவுரை!
தீபாவளி கொண்டாட்ட வேளையில் பட்டாசுகளின் சத்தம் மற்றும் ஒளிச் சிதறல்களால் செல்லப்பிராணிகள் பயம் மற்றும் பதட்டத்திற்கு ஆளாகும். இதை தவிர்க்க பல எளிய பாதுகாப்பு முறைகள் அவசியம் என பெட் கேலக்ஸியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஹில்டா சகாயமரி நித்யா கூறியுள்ளார். செல்லப்பிராணி அமைதியாக இருக்க கூடிய சிறப்பான இடத்தை வீட்டுக்குள் அமைக்க வேண்டும். ஜன்னல், திரைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அமைதியான இசை அல்லது வெள்ளை இரைச்சல் இயந்திரம் பயன்படுத்துவதால் சத்தத்தால் ஏற்படும் பயம் குறையும். செல்லப் பிராணிகளை நீண்ட நேரம் தனியாக வைக்காமல் கவனிக்க வேண்டும். தீபாவளிக்கு முன்பு பட்டாசு சத்தங்களை மெதுவாக ஆடியோவில் ஒலிக்கவிட்டு, செல்லப்பிராணிகளின் பயத்தை போக்கலாம். அன்றாட வழக்கமான உணவு, நடைப்பயிற்சி, விளையாட்டு நேரங்களை மாற்றாமல் தொடருங்கள். வெளியில் அதிக சத்தம் இருக்கும் நேரங்களில் செல்லப் பிராணியை வீட்டுக்குள் வைத்திருங்கள். கதவுகள், கண்ணாடிகள், பால்கனி வாசல்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். சத்தம் குறைந்த காலை நேரங்களிலேயே வெளியே அழைத்துச் செல்லுங்கள். பட்டாசு மீதிகள், தீப்பொறிகள், இனிப்புகள், விளக்குகள் அருகில் செல்லப்பிராணிகள் வராமல் கவனியுங்கள். செல்லப்பிராணிகள் கடுமையான பதட்டம் அடைந்தால் கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிக அவசியம். இவ்வாறு அவர் கூறினார். டாக்டர் கணேஷ்குமார் கூறுகையில், “தீபாவளி மகிழ்ச்சியின் நேரம் என்றாலும், நம்முடைய செல்லப்பிராணிகள் பாதுகாப்பாக, அமைதியாக இருக்க நாமே சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிக முக்கியம்” என்றார்.

Comments are closed.